Thursday, December 31, 2009

வாங்க ஒரு கை பார்க்கலாம்........

அழகான இந்த நள்ளிரவு உற்சாகமான மற்றுமொரு புது வருடத்தை பிறப்பித்திருக்கிறது. என்னைப்பொருத்தவரைக்கும் கடந்து போன 2009 ம் ஆண்டு நிறைய பாடங்களை கற்றுக்கொடுத்திருந்தது. சந்தித்த தோல்விகள் அநேகம் இருந்தாலும் எனக்கு கிடைத்த சில வாய்ப்புக்களும் சேர்ந்து வந்த சவால்களும் என்னை மற்றுமொரு கட்டத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றன. என்னுடைய வாழ்க்கையின் இன்னுமொரு படியை கடந்திருக்கின்றேன். தோல்விகளின் வேதனை தந்த வலியை விட அந்த போராட்டமான தருணங்கள் கற்றுத்தந்த பக்குவம் எனக்குத்தேவையாயிருந்த ஒன்று. அதைவிட எனக்குக்கிடைத்த சில சவாலான வாய்ப்புகள் என்னை கடந்த வருடம் முழுவதுமாய் ஓட வைத்திருந்தன. அந்த ஓட்டம் எனக்கு முற்றிலும் புதியதாய் இருந்த போதும் நான் மிகவும் அனுபவித்தேன். புதிய நட்புகள் சில பிரிவுகள் பல முரண்பாடுகள் என என்னுடைய வாழ்க்கையின் வித்தியாசமான ஒரு காலகட்டத்தை கண்டிருந்தேன். இந்தக்கால கட்டத்தில் நான் எடுத்த சில தீர்க்கமான தீர்மானங்கள் மிகவும் முக்கியமானவை. இன்னமும் அதன் விளைவுகளை நான் சந்திக்கவில்லை என்றாலும் என்னை பொருத்தவரைக்கும் மிக நிதானமாக நான் எடுத்த முடிவுகள் அவை.

கடந்த வருட ஆரம்பத்தில் நான் இரண்டு தீர்மானங்களை எடுத்திருந்தேன். ஒன்று நேரத்துக்கு வேலை செய்தல். இரண்டாவது பேச்சை குறைத்து செயலை கூட்டுதல். இதில் இரண்டாவது ஓரளவுக்கு நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. முதலாவது........... ம்ஹும் முடியல (வடிவேலுவின் பாணியில்). இந்த வருடமும் அதே முதலாவது தீர்மானம் தொடர்கிறது. அத்தோடு நிறைய எழுத யோசித்திருக்கிறேன். வாசிப்பு எப்படி ஒரு மனிதனை முழுமை ஆக்குகின்றதோ அதே போல பேச்சாற்றலும் எழுத்தும் அவனை ஆளுமைப்படுத்துகிறது (அதத்தான் மொழி ஆளுமை எண்டு சொல்லுவாங்கப்பா......).

நிறைய எதிர்பார்ப்புகளோடு இந்த புதிய வருஷத்தில் களமிறங்கியிருக்கிறேன்.... சாதனையோ சோதனையோ வாங்க ஒரு கை பார்க்கலாம்........



அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.......!!!

1 comment:

  1. சைந்தவியின் கடைசி கடிதம்...(என் நண்பன் ரெட்டைவால்ஸின் எழுத்தில்...)
    http://rettaivals.blogspot.com/2010/03/wo.html#comments

    ReplyDelete