Saturday, August 14, 2010

அவர்களுக்கென்ன தெரியும்...!!!


இந்தவாரம் இரண்டாம் தடவையாக இதே மாதத்தில் யாழ் செல்ல வாய்ப்புக்கிடைத்தது..  யாழ் என்றால் யாழ் நகரம் அல்ல யாழ் செல்லும் வீதியில் ஒரு கிராமம். செல்லும் வழியெங்கும் சகோதர இனத்தவர்கள் உற்சாகமாக தங்கள் விடுமுறையை களித்துக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த புத்த கோவில்களில் வழிபடுகிறார்கள். இராணுவ நினைவுத்தூபிகளின் முன்னால் நின்று தங்கள் அஞ்சலிகளை செலுத்துகிறார்கள், இராணுவ படைப்பிரிவுகள் நடத்தும் உணவகங்களில் பாணும் பருப்பும் சாப்பிடுகிறார்கள் சிலர் கிரிபத் சாப்பிடுகிறார்கள். வேறு சிலர்  வெளிகளில் தாமாகவே சமைத்து உண்ணுகிறார்கள். இப்படியாக முன்னெப்போதும் இல்லாத புதிய காட்சிகள்...

குளிர்ச்சியான கிராமத்து வீதிகளில் நடந்து திரிவது ஒரு சுகம் தான். கப்பலேந்தி மாதா கோவில் உற்சவதிலும் கலந்து கொண்டது வித்தியாசமான அனுபவம். சமயங்கள் சம்பிரதாயங்கள் எல்லாவற்றிலும் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் அங்கு நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் இரசிக்க முடிந்தது. அதிலும் குறிப்பாக நிறைந்து நின்ற இராணுவத்தினர் சிரித்தபடி மக்களை வரவேற்று உபசரித்தமை, எப்போதும் தமிழில் மாத்திரம் உரையாடியமை (அதிலும் அவர்களில் அநேகம் பேர் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருந்தார்கள்),  அவர்களுக்கு வழங்கப்பட்ட கடுமையான பயிற்சிகளை காட்டியது.



விழுந்து விழுந்து அவர்கள் கவனித்துக்கொண்டிருந்தார்கள். தமிழில் சரளமாக பேசினார்கள், கையசைத்து விடைகொடுத்தார்கள், எல்லாமே மகிழ்ச்சிக்குரிய விஷயங்கள் தான் என்றாலும் எதோ ஒன்று உள்ளுக்குள் உறுத்துவது மாத்திரம் புரிந்தது. மக்களோடு அவர்கள் பழக ஆர்வமாயிருப்பது நல்ல விஷயமே என்றாலும் அவர்கள் அணிந்திருக்கும் சீருடை காரணமாக மக்களால் அவர்களோடு இயல்பாக பழக முடியவில்லை என்பது தான் நிஜம். மக்களோடு மக்களாக வாழ அவர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கபடுகின்றன.  அதிகமாகவே சிரிக்கிறார்கள், தாமாகவே வந்து உபசரிக்கிறார்கள் உதவி செய்கிறார்கள்.  வெகு சீக்கிரம் அந்த இடத்திலிருந்து இராணுவ முகாமை அகற்றப்போவதாக அவர்களே சொல்கிறார்கள். என்ன இருந்தாலும் அவர்களுக்கு வழங்கப்படுகின்ற பயிற்சிகள் சொல்லும் செய்தி நமக்கெல்லாம் தெரிந்த செய்தி தான். அந்த இராணுவ வீரர்களின் சிரிப்பில் எந்த குற்றமும் இல்லை அதுசரி அவர்களுக்கென்ன தெரியும் மேலிடத்தாரின் நிகழ்ச்சிநிரல்கள்.

No comments:

Post a Comment